Friday, December 22, 2006

சிவப்பதிகாரம்: நடுத்தர வர்க்க புலம்பல்

"பாராளுமன்றம் பன்றித் தொழுவம்" - லெனின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த ஓட்டு பொறுக்கிகளை ஒவ்வொருவராக கொலை செய்யும் சத்யா(விஷால்) நான்காவது வேட்பாளரை கொலை செய்யும் போது மாட்டிக்கொள்கிறான். பிறகு வசனம் பேசுகிறான். சத்யாவுக்கு உதவியாக இருந்த அவனுடைய கல்லூரி பேராசிரியரும்(ரகுவரன்) மாட்டிக் கொள்ளிகிறார்(கிராமத்தில்). பிறகு அவரும் கதை சொல்கிறார், போலீசு கேட்கிறது. கோடம்பாக்கம் சினிமாத்தனம்..

கல்லூரி மாணவர்களிடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட ஒரு தொகுதியை பற்றிய கருத்துகணிப்பை சேகரிக்கும் வேலையை கொடுக்கிறார் பேராசிரியர், மாணவர்களும் வாக்காளர்களிடம் செல்கிறார்கள், கருத்துக்களை தொகுக்கிறார்கள். மாணவர்களுடைய கருத்துக்கணிப்பு கல்லூரியின் பெயரில் பத்திரிக்கையில் வெளியாகிறது.
தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் படுதோல்வியடைகிறான். கருத்துகணிப்பை வெளியிட்டு தன் வாழ்வை நாசமாக்கிய மாணவர்களை பழிவாங்க எண்ணி தன்னுடைய அரசியல் பலத்தால் போலீசை ஏவி விட்டு கல்லூரிக்குள் கலவரத்தை உருவாககுகிறான். போலீசிடமிருந்து தப்பிக்க ஒரு வகுப்பறைக்குள் ஒளிந்து கொள்ளும் மாணவர்களை மொத்தமாக தீ வைத்து கொழுத்தப்படுகிறார்கள். மொத்தம் நாற்பதுக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இறந்து போகிறார்கள். இந்த இடத்தில்தான் சத்யாவுக்கு சமூக அக்கறை சுரக்கத் துவங்குகிறது.
பிறகு பேராசிரியரோடு சேர்ந்து கொண்டு மொத்த ஓட்டு பொறுக்கிகளையும் வேட்டையாடுகிறான் இறுதியில் போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். பிறகு உச்சஸ்தாயில் பேசத்துவங்குகிறான் தியேட்டர் அமைதியாகிறது "நம்ம நாடு முன்னேறாம இருக்கிறதுக்கு காரணம் இது போன்ற அரசியல்வாதிகள்தான், பல பேர் அரசியலே வேண்டாமென்று ஒதுக்குவதற்கும் இவர்கள்தான் காரணம். மக்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்தி இது போன்ற கிருமிகளை தண்டிக்கனுமே தவிர ஒதுங்கிபோகக் கூடாது, எல்லோரும் ஓட்டுப் போடனும், ஓட்டுப்போடுவதை சட்டமாக்க வேண்டும், ஓட்டுபோடுவதை கட்டாயப்ப்டுத்த வேண்டும்.(ராமதாசுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்) யாருக்குமே ஓட்டுப் போட விருப்பமில்லை என்றால் தேசியகொடி சின்னத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டெருக்கு ஓட்டுப் போடுங்க. ஓரு டாக்டராகனும்னா MBBS தகுதி வேனும், வக்கீலாகனும்னா சட்டம் படிக்கனும், கலெக்டராகனும்னா IAS படிக்கனும், கிளார்க்காகனும்னா கூட ஒரு டிகிரி தகுதி வேனுங்கிற நாட்டில், நாட்டையே ஆளப்போகிற அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியுமே வேணாமா சார்? மக்களை கொள்ளையடிக்கிற, முட்டாளாக்குகிற அரசியல்வாதிகள் இருக்க கூடாது அதனாலதான் கொலை பண்ணினேன் என்று நிறுத்தி தாழ்ந்த ஸ்தாயிக்கு இறங்கி போலீசையும், நம்மையும் பார்த்து "ஏதாவது பண்ணுங்க சார்" என்று கூறும் போது 'அடச்சீ' இதைக் கேட்கவா இங்கே வந்தோம் என்று பார்வையாளன் சலிப்புறுகிறான், ஏனெனில்

* முதலாவதாக அனைத்து கட்சிகளும் பிழைப்புவாத, பொறுக்கி கட்சிகள்தான், கிரிமினல்கள் ரவுடிகள் இல்லாத கட்சி எதுவுமில்லை என்பது வாக்காளனுக்கு தெரியும். அதிலொன்றும் புதுமையில்லை.

* இரண்டாவதாக அரசியல்வாதிகள் படித்திருக்க வேண்டும் என்கிறார்.. நேரு, இந்திரா துவங்கி ராஜீவ், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம், அத்வானி, வாஜ்பாய், யெச்சூரி, பரதன், பிரகாஷ் காரத், கருணாநிதி, ஜெயா, வை.கோ, அன்புமனி, தயாநிதி வரையிலான யாருமே படிக்காத 'கூமுட்டைகள்' அல்ல, எல்லோரும் படித்த அறிவாளிகள்தான் அல்லது இன்னும் சிறப்பாக கணினி யுக கல்வியை கற்றுக் கொண்டு பாராளுமன்றம் போனால் அடகுபோன பன்றித் தொழுவத்தை மீட்டுவிட முடியுமா?, அல்லது பன்றிகள்தான் பசுவாகி விடுமா?, எதற்காக அரசியல்வாதிகள் படித்திருக்க வேண்டும் என்கிறார். படித்தவரகள் திருடமாட்டார்களா?, அல்ஜீரியா ஒரு நாடா, கண்டமா என்று கூட தெரியாமல் அமெரிக்காவில் இருக்கிறதே 'புஷ்' அது படித்ததா, படிக்காததா?.


* அடுத்து யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தேசியகொடி சின்னத்தில் கலெக்டெருக்கு ஓட்டுப் போடட்டும் என்கிறார் இயக்குநர். ஆட்சியருக்குள்ள அதிகாரம் பற்றியும், அந்த பதவியிலிருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை பற்றியும் நாம் கூற வேண்டியதில்லை ஏனெனில் அதற்கான பதில் படத்திலேயே இருக்கிறது. பேராசிரியர் ரகுவரன் ஒரு முன்னாள் கலெக்டெர் நேர்மையாக நடந்துக் கொள்ள முயன்று பத்து இடங்களுக்கு மேல் மாற்றலாகி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேராசிரியர் ஆனவர். பிறகு ஏன் ஆட்சியருக்கு வாக்களிக்க வேண்டும்?


*அடுத்து ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண்டும். ஓட்டு போடாதவர்களுக்கு இந்திய குடிமகனுக்குள்ள சலுகைகளை பறிக்க வேண்டும், வாக்களிக்காததை குற்றமாக கருத வேண்டும் என்றெல்லாம் கூறுவது பச்சையான ஜனநாயக விரோத கருத்துக்கள். நாம் நலிந்து போயிருப்பதை கண்டு, நம் மீதுள்ள அதீத அக்கறையால் மலத்தை சோறு என்று கூறி நம் மீது தினிக்க்கிறார் இயக்குநர். அவருக்கு மூக்கு இல்லாவிட்டால் நாம் என்ன செய்வது? நமக்கு நாற்றம் குடலை புரட்டுகிறதே.
ஆக பிரச்சனைக்கு தீர்வு சொல்லமல் 'ஏதாவது செய்ங்க சார்' என்று கையை விரிப்பதும், தன்னை சுற்றி எந்த பிரச்சனையும் இருக்க கூடாது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் ஆனால் அதற்க்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறி ஒதுங்கிக் கொள்வதும், இரத்தமும், சதையும், மலமும், சளியுமாக நாறிக் கொண்டிருக்கும் இந்த மலக் குட்டை சமூகத்திலேயே புரண்டு புரண்டு எழுவதும் அவ்வப்போது சிறு சிறு முனகல்கள், புலம்பலகள், இரக்கங்களோடு நிறுத்திக் கொள்வதையே சமூக அக்கறையாக கருதுபவர்களின் திரை வ்டிவ புலம்பல்தான் 'சிவப்பதிகாரம்'. அந்த புலம்பலும், முனகலும் கூட மக்களின் சகிக்க முடியாத வாழ்நிலையை பார்த்து வந்ததல்ல, மாறாக தன்னுடைய நலன்களிலிருந்து வருகிறது, தன்னுடைய நலனாக(சிறியதாகவும் இருக்கலாம்) இருந்தாலும் அதற்காக தான் இறங்க முடியாது அதுவாகவே நட்க்கலாம், நாலு பேர் செய்யாமலா போய் விடுவார்கள் என்பதால் அது புலம்பலாகவே அடங்கிவிடுகிறது. மக்கள் மீது ஏற்படும் அளவற்ற அன்பினாலும், இரக்கத்தாலும் ஏற்ப்படுவது புலம்பலாக இருக்காது, அது கடுஞ்சினமாக இருக்கும். அது தீர்வைத் தேடும். பிறகு குத்தீட்டியின் வேகத்தோடும், கூர்மையோடும் தன் இலக்கை நோக்கி பயனிக்கும். புலம்பல் மடியும் சினம் வெல்லும். எனவே பதிவுகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் COMMENT அடித்து சமூக சொரனையற்று கிடக்கும், விலங்கு தன்மையை மட்டுமே இழந்துள்ள பதர்களைப் போலின்றி மனிதத் தன்மையை உணர்ந்த மனிதர்களாக சினம் கொள்ள பழகுவோம்..

No comments: